Showing posts with label Tamil Posts. Show all posts
Showing posts with label Tamil Posts. Show all posts

Sunday, September 27, 2009

அப்பா ...

இப்பதிவு என் அப்பாவிற்கு சமர்ப்பணம்.

ஆண் பிள்ளைகளுக்கு அம்மா தான் எப்பவுமே நெருக்கம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அன்னையிடம் அன்பையும்,தந்தையிடம் அறிவையும் பெற வேண்டும் என்கின்றனர். ஒவ்வொருவருக்கும் "என் அப்பா தான் சிறந்தவர்" என்ற பெருமையும் ... ஏன் கர்வமும் இருப்பது நியாயமானதே. அத்தகைய எனது உணர்வுகளின் நீட்சியே இப்பதிவு.

அப்பா என்பவர் சிறு வயதில் எல்லாம் எனக்கு வில்லனாகவே காட்சி தந்து பழக்கப்பட்டவர். பல முறை, தவறு ஏதேனும் செய்து விட்டால் - அம்மா மாலையில் அப்பாவின் வருகைக்காகவும், வந்தவுடன் பத்தி வைக்கவும் காத்திருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஸ்கூட்டரில் செல்லும் போது GK கேள்விகள் கேட்பது, கதை சொல்வது, ரைம்ஸ் சொல்ல கேட்பது, Inswinger & Outswinger முதலியன சொல்லித்தருவது என சினிமா அப்பாக்கள் செய்த எதையும் நிச்சயமாக என் அப்பா எனக்கு செய்ததில்லை. அவர் இவை யாவற்றையும் செய்திருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கவில்லை.

அப்பாவும் அம்மாவும் ஆரம்பத்திலேயே முடிவு செய்து கொண்டார்களாம் ... தங்களது பிள்ளைகள் இறுதி வரையில் ஆங்கில வழிப்பள்ளியிலே தான் பயில வேண்டும் என்று. அவர்களது சக்திக்கு மீறிய காரியமாகவே இது கருதப்பட்ட காலம் அது. உறவுக்காரர்கள் மற்றும் அண்டை வீட்டார்தம் சிறுவர்கள் யாவரும் அரசுப்பள்ளிக்குச்செல்ல நாங்கள் matriculation பள்ளிக்கு சென்றோம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... எந்த குடும்பசகித விழாவாயினும் சரி அல்லது எவர் வீட்டுக்கு வந்தாலும் சரி, அவர்கள் கேட்கும் முதல் கேள்வி இது தான் ... "உங்க வசதிக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் தேவையா ?" ... இதற்கு சிறு புன்னகை ஒன்றையே பதிலாக தருவார் அப்பா. சென்னை போன்ற பெருநகரங்களில் எப்படி எனத்தெரியவில்லை ... 90களின் தொடக்கத்தில் ஆங்கில வழிக்கல்வி சிறுநகரங்களுக்குள் நுழைந்த புதிது என்று தான் சொல்ல வேண்டும். It's considered ELITE then ...

படிப்பு சம்மந்தமாக எது கேட்டாலும் உடனே நிறைவேற்றப்படும். Rough note books, pencils, refill-pens, inkbottle, India-Outline,political,river maps-50 each என அனைத்தையும் வருடத்தின் தொடக்கத்திலேயே வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்து விடுவார் அப்பா. "அவன் திடீர்னு எதையாவது கேட்பான் ... என் வேலைகளுக்கு மத்தியில் நான் மறந்து விடுவேன் ... அதான்" - அப்பா தரும் விளக்கம்.

அப்பாவுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் இல் Security Departmentஇல் உத்தியோகம். "வாட்ச்மேன் பசங்க படிப்புல என்னிக்குமே கெட்டி தான்" - இன்றும் சாதரணமாக என் காதுகளில் ஒலிக்கும் வாசகம் இது. அவருடைய Chief உடைய மகளும் நான் பயின்ற பள்ளியிலேயே தான் பயின்றாள். அப்பாவுக்கு அதில் என்றுமே ஒரு பெருமையும்,திருப்தியும் உண்டு. நான் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததனை அறிந்து அவருடைய boss அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததனை இன்றும் ஆத்மார்த்தமாக நினைவு கூர்வார். போஸ்ட் ஆபீஸ், வங்கி, தாசில்தார் ஆபீஸ் என எங்கு சென்றாலும் "உங்க பசங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க ?" என்ற கேள்விக்கு பூரிப்புடன் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் அப்பா.

எட்டு ஒன்பது வயதிருக்கலாம் ... '96 Wills World Cup - நாடே சச்சின் டெண்டுல்கரை கடவுளாகவும், இந்திய கிரிக்கெட் அணிக்காக கடவுளிடமும் வழிபட்டுக்கொண்டிருந்தது. எல்லாரையும் போல நமக்கும் கிரிக்கெட் ஆர்வம் ரத்தத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்த காலம் அது. பக்கத்துக்கு வீட்டு தவமணி டீச்சரின் புண்ணியத்தில் The Hindu செய்தித்தாள் அறிமுகமானது. Zimbabwe எனும் வார்த்தையை உச்சரிக்கவே தெரியாத காலம் அது ... Azharuddin, Manjrekar போன்ற பெயர்களை Scoreboard பார்த்து Rough note இன் பின்புறம் எழுதி வைத்துக்கொள்வேன். அப்பா தான் "The Sportstar"ஐ அறிமுகப்படுத்தினார். சிறுவர் மலர், கோகுலம் என அனைத்தையும் அனாயசமாக படித்துத்தூக்கி எறிந்து கொண்டிருந்தேன். Sportstarஇல் படங்களுக்கு கீழிருந்தவற்றை மட்டும் படிக்க ஆரம்பித்தேன். அப்பா எங்கு சென்றாலும் Sportstar வாங்கி வந்து விடுவார். Olympics, World Cup ஆகியனவற்றின் போது Special Issue வினை வாங்குவதற்காகவே ஈரோடு, சேலம் சென்று வாங்கிவந்திருக்கிறார். அவை யாவற்றினையும் இன்றும் சேமித்து வைத்திருக்கிறேன், 200-250 புத்தகங்கள் தேறும். என்னுடைய படிக்கும் ஆர்வத்திற்கு என்றுமே எண்ணெய் ஊற்றப்பார்த்திருப்பார் அப்பா.

அப்பா கம்யூனிஸ்ட், நாத்திகவாதி. யூனியன், தோழரே என வீட்டுக்கு அடிக்கடி கம்யூனிசவாதிகள் விஜயம் இருக்கும். அவர்களது பேச்சுக்கள் புரியாவிடினும் அருகில் அமர்ந்து கவனிப்பது என் வழக்கம். என்றைக்குமே அவரது நாத்திகத்தையும், கம்யூனிசத்தையும் அவர் எங்களுக்கு போதித்தது கிடையாது. தீக்கதிர், CITU செய்தி போன்ற கம்யூனிசம் சம்மந்தப்பட்ட தினசரிகளும், வார/மாத இதழ்களும் வீட்டிற்கு வரும். எதைப்படிக்கலாம் என துடித்துக்கொண்டிருந்த காலங்களில் இவற்றினையும் நான் புரட்டியிருக்கிறேன். அச்சிறுவயதினில் கம்யூனிசமும், Anti-American bashings உம் எனக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும் எனக்கு பிடித்த நிறம் சிவப்பாக இருப்பதற்கும், பிந்தைய காலங்களில் லெனின், ஸ்டாலின், மாவோ சே துங், ஜோதி பாசு, சே குவரா ஆகியோர் மீது ஒரு சிறு பற்றுதல் உண்டானதற்கும் காரணம் - அன்று CITU செய்தியில் வந்த அட்டைப்பட கார்ட்டூன்களும், V.P.சிந்தன் மற்றும் ஜோதி பாசுவின் வாழ்கை வரலாற்றுப்புத்தகங்களில் நான் கண்ட படங்களும் தான்.

அப்பாவுக்கு அரசியலில் ஆர்வம் அதிகம். News Channels தான் அதிக நேரம் பார்த்துக்கொண்டிருப்பார் (பல அப்பாக்கள் இப்படித்தான் போலும்). கொஞ்சம் முதிர்ந்த பருவங்களில் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன். பழைய அரசியல் மற்றும் சினிமா செய்திகள் அவர் மூலமாக எனக்கு கிடைத்திருக்கின்றன. அப்பா எம்.ஜி.ஆர் அபிமானி. எம்.ஜி.ஆர் இன் படங்கள் பெற்ற வெற்றி, கிராமங்களில் எம்.ஜி.ஆர் எனும் பிம்பத்தின் பாதிப்பு என்ன ? என பல விவாதங்கள். இந்தியாவில் ஏன் கம்யூனிசம் தழைக்கவில்லை ?, ஏன் தழைக்கவும் முடியாது ?, எம்.ஜி.ஆர் ஆல் எப்படி மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சர் ஆக முடிந்தது ?, இந்தியாவில் 1975இல் Emergency அமல்படுத்தப்பட்ட போது சங்ககிரியில் மாணவராக அதனை உணர முடிந்ததா ?, ஏன் வங்காள அரசியல்வாதிகள் தவிர வேறு எவரையும் நீங்கள் அரசியல் தலைவராக ஏற்க மறுக்கிறீர்கள்? போன்ற பல கேள்விகளை விவாதித்திருக்கிறோம்.

அப்பாவுக்கு ஆங்கில மருத்துவத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அவருக்கு Alternate medicines ஆன floral remedies, Acupuncture, Ayurveda, Homeopathy பற்றி படிக்கவும், சோதித்து பார்க்கவும் ஆர்வம் அதிகம். வீட்டில் இது தொடர்பான பல புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார். அவருக்கு பிடிக்காத ஒரு விஷயம் நேரா,நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது. நேரத்திற்கு சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளையும், அனுகூலங்களையும் பற்றி அடிக்கடி விரிவுரை ஆற்றுவார் (அதில் Salivary glands, Pancreas, digestive juices, hormones பற்றிய அனைத்து செய்திகளும் அடங்கி இருக்கும்).

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தால் நான் என்றைக்குமே அம்மா பக்கம் தான். அதனாலேயே பல முறை அவர் எனக்கு வில்லனாக காட்சி தருவார்.

அப்பா எதையுமே எங்களுக்கு Spoonfeed செய்ததில்லை. மீனைத்தின்னத்தருவதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பவனே நல்ல ஆசானாவான். அதைத்தான் எனது தந்தையிடம் நான் உணர்கிறேன். அவர் நேரிடையாக எங்களுக்கு சொல்லித்தந்ததைவிட, பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் சூழலையும், கருவிகளையும் திறம்பட உருவாக்கித்தந்திருக்கிறார்.

இன்றைய நாட்களில் நானும் என் அப்பாவும் அதிகம் பேசிக்கொள்வது கூட கிடையாது. எனினும் அவர் என் மேல் வைத்திருக்கும் பாசத்தையும், நான் அவர் மேல் வைத்திருக்கும் மரியாதையையும் உணர்த்திக்கொள்ள ஒற்றைப்பார்வையே போதுமானது.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" ...

இறுதியாக விழியன் இன் கவிதை ஒன்று ...

தந்தை எவ்வழி...
நடந்த கோணல் பாதை மீதினில்
புதிதாய் சின்னஞ்சிறு பாதங்கள்...
சற்றே நடுங்கி
நிதானித்து
பத்திரமாய் எழுகின்றன கால்கள்
தொடரப்போகும் அடிகளுக்கு…