செம்புலம் சேர்ந்த நீர் - இலக்கியமும் சினிமாவும்...
சங்க காலத்தில் இயல்,இசை,நாடகம் என தமிழை வளர்த்தனர்.இயற்றியதை இசையாக்கி... இசைப்பாடல்களை நாடகமாக்கி பின்னாட்களில் தமிழை வளர்த்தனர்.இயல்,இசை,நாடகம் என முத்தமிழும் இணைந்து தவழும் கலை சினிமா.தற்கால சினிமாப்பாடல்களில் தமிழ் சில நேரங்களில் சிதைக்கப்பட்டாலும், சில கவிஞர்களின் முயற்சிகளால் இலக்கியத்திற்கும் திரைப்பாடல்களுக்கும் இடையிலுள்ள தொலைவு குறைக்கப்படுகிறது.
செம்புலம் சேர்ந்த நீர் - சமீப காலங்களாக திரைப்பாடல்களில் இவ்வுவமையை கவிஞர்கள் பயன்படுத்தக்கண்டுவருகிறோம்.இவ்வுவமை பற்றியதே இந்த சிறிய உரை.
செம்புலம் சேர்ந்த நீர் கிட்டவில்லை, ஆகையால் சிவந்த மண்ணும், மழையும் தனித்தனியே ... :)
செம்புலம் சேர்ந்த நீர் - இலக்கியம்
இந்த உவமையை தனது பாடலில் புகுத்தியவரின் இயற்பெயரை அறிவதற்கில்லை.அவரது பெயரையே செம்புலப்பெயனீரார் என்று சங்க இலக்கிய காலத்திலிருந்து வழங்கி வருகின்றனர்.அவரது இவ்வுவமை இடம்பெற்ற குறுந்தொகை பாடல் இதோ.
திணை - குறிஞ்சி / தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
இப்பாடலின் பொருள் பின்வருமாறு:
(இணையத்தின் உதவியோடு)
என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும்
உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும்
இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன
வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர்
எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ
அதுபோல ஒன்று கலந்து விட்டன.
(குறுந்தொகைப் பாடல் எண் நாற்பது. ஆசிரியர் செம்புலப்பெயனீரார்)
Courtesy: http://www.thinnai.com/?module=displaystory&story_id=60705102&format=html
செம்புலம் சேர்ந்த நீர் - சினிமா
இவ்வுவமை இடம்பெற்றுள்ள மூன்று திரைப்படப்பாடல்களை இங்கே தொகுத்தளிக்க விழைகிறேன்.
1) நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் - இருவர்
2) முன்பே வா என் அன்பே வா - சில்லுனு ஒரு காதல்
3) செய் ஏதாவது செய் - பில்லா 2007
1) நறுமுகையே நறுமுகையே:
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன...
இந்த சரணத்தில் முதல் இரண்டு அடிகளும்,இறுதி அடியும் மேற்கண்ட குறுந்தொகைப்படலை ஒத்திருப்பதைக்காண்க.
2) முன்பே வா என் அன்பே வா:
தேன்மலை தேக்குக்கு நீதான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல் வேராரும் சாய்ந்தாலே தகுமா...
நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தவளா...
3) செய் ஏதாவது செய்:
உன் உருவுக்குள் நீரூற்றி
கருவுக்குள் வேரூன்றி கொண்டு செல்லவா..
செம்புலநீர் போல் ஐம்புலம் சேர்க
வேறு ஏதாவது திரைப்பாடல்களில் இவ்வுவமையை கண்டிருந்தால் தாராளமாக இங்கு குறிப்பிடலாம்.
முதலில் நீ தமிழில் எழுதியதற்கு என் மகிழ்ச்சிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எதாவது தலைப்பைப் பற்றி நீ தமிழில் எழுத வேண்டும் என்று உனக்குச் சொல்ல வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.
ReplyDeleteமேலும் தமிழில் பல தலைப்பில் எழுது. படிக்க ஆர்வமாக இருக்கிறது.
இப்பதிவின் தலைப்பைப் பார்த்து நீ பெரியதாக ஒரு அலசல் செய்வாய் என நினைத்தேன். ஆனால் உப்பு சப்பு இல்லாமல் முடித்து விட்டது சிறிது ஏமாற்றம் அளிக்கிறது.
//அம்புடன்
ReplyDeleteஅல்ல... அன்புடன்..:)