Thursday, February 11, 2010

பேருந்து பயணங்களில் ...

பேருந்தில் பயணம் செய்வது எனக்கு எப்போதுமே பிடித்தமான விஷயமாக இருந்துவந்திருக்கிறது. என் அப்பாவிடம் டி.வி.எஸ் முதலிய உந்துவண்டிகள் அன்றைய நாட்களில் இருந்திருக்கவில்லை, அதனால் சிறுவயதினில் எங்கு வெளியே செல்வதாயினும் பேருந்து தான். இதற்காகவே வாரா வாரம் அம்மாவுடன் சந்தைப்பேட்டை செல்வது மிகவும் பிடித்தமானதாக இருந்தது எனக்கு. பவானி கூடுதுறை எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவு. ஒரு மணி நேரம் பிடிக்கும் ... ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்திற்காகவே எனக்கு கூடுதுறை மிகவும் பிடித்திருந்தது. அப்போதெல்லாம், பல முறை சென்று வந்த போதிலும் பாதை மற்றும் சாலையோர அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள பிரயர்த்தனப்படுவேன். எனினும், ஒவ்வொரு பயணமும் புதிதாகவே தோன்றும். இன்றளவும், பெங்களூரிலிருந்து சொந்த ஊரான சேலம் செல்லும் போது கூட பேருந்து பயணம் களிப்பு மிகுந்த அனுபவமாகவே எனக்கு தென்பட்டுவருகிறது. ஆயினும், பெங்களூர் வாசம் உள்ளூர் பேருந்து பயணத்தினை வெறுப்பும், சலிப்பும் உடைய அனுபவமாக மாற்றியது வேறு விஷயம்.

எல்லோரையும் போலவே "ஜன்னலோரம்" எனக்கு மிகப்பிடித்தமான ஒன்று ("பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்" என்று பாட்டெழுதும் அளவுக்கு இது ஒரு பொதுப்படையான விருப்பம்). அன்றைய காலங்களில் பேருந்தில் ஏறியவுடன் கண்களை வேக, வேகமாய் அலைய விட்டு என் தம்பியையும், என்னோடு ஏறியவர்களையும் முந்தியடித்து ஒரு ஜன்னலோர இருக்கையை பிடித்து அமர்வதிலே நான் கொள்ளை ஆர்வம் காட்டியிருக்கிறேன். இன்றைக்கும் பேருந்தின் ஜன்னலோரம் எனக்கு கவிதையாகவே தோன்றுகிறது. முன் செல்லும் சாலை, பின் நகரும் மரங்கள், விசித்திரமான மற்றும் வித்தியாசமான மனித முகங்கள் ... ஒரு முழுமையான அனுபவம் அது. திரைப்பட சுவரொட்டிகளை பார்த்தல், கடைகளின் பெயர்ப்பலகைகளை வேகமாய் எழுத்துக்கூட்டி வாசித்தல், மற்றொரு பேருந்து முந்திச்செல்லும்போது தென்படும் முகங்களை நோக்குதல் என்று சுவாரசியங்கள் ஏராளம். சில முறைகள், இன்று எத்தனை பேரை சாலையோரங்களில் காண்கிறோம் என எண்ணிக்கை வைத்தது கூட எனக்கு நினைவிருக்கிறது.

பதின்பருவங்களில் பேருந்து பயணம் எனக்கு ஒரு வித்தியாசமான பரவசத்தை அளிக்கத்தொடங்கியிருந்தது. இந்தத்தருணத்தில் ஆர்.கே.எம் (RKM) ஐப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தேவைப்படுகின்றது. RKM சங்ககிரியிலிருந்து பவானி நோக்கி இயக்கப்பெறும் ஒரு தனியார் பேருந்து. எங்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதலான மாணவர்களுக்கு  தினமும் காலையில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும். தினமும் காலை 7.45 மணிக்கெல்லாம் நாங்கள் பள்ளியில் இருக்க வேண்டும். RKM சரியாக 7.15 மணிக்கு சங்ககிரியிலிருந்து புறப்பட்டு 7.40 க்கு எங்களை பள்ளியில் சேர்க்கும். நான் 7.15 மணிக்கு வீட்டில் இருந்து எனது மிதிவண்டியில் கிளம்பி, என் பெரியம்மா வீட்டில் மிதிவண்டியை நிறுத்தி விட்டு, 7.25 மணிக்கு பேருந்தில் ஏறுவேன். ஏறக்குறைய, வெறும் 15 நிமிடங்கள்தாம் பேருந்துப்பயணம் என்றாலும் அந்தப்பயணம் அளித்த அனுபவங்கள் அலாதியானது. அந்தப்பேருந்து கிட்டத்தட்ட எங்கள் பள்ளி மாணவர்களுக்காகவே இயக்கபட்டதென எண்ணவே தோன்றும். அப்பேருந்தின் காலை 7.15 இயக்கத்தின் போது பயணம் செய்யும் கிட்டத்தட்ட 65 பேர்களில் சுமார் 40 பேர் எம் பள்ளி மாணாக்கராகவே இருப்பர். எங்களுக்கு பயணச்சீட்டு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டதாகக்கூட நினைவு.

RKM பேருந்து அழகான நேர்த்தியுடன் அலங்கரிக்கப்பெற்றிருந்ததாய் நினைவிருக்கிறது. பின்புறம் கண்ணாடியில் ஐஸ்வர்யா ராய் அழகாக சிரித்துக்கொண்டிருப்பார். பேருந்தில் பொருத்தப்பெற்றிருந்த ஒலிப்பெருக்கிகள் கூட நல்ல தரமானவையாகவே எனக்கு அப்போது தோன்றின. இன்றும் கூட, அந்நாட்களின் காலைப்பயணத்தின் போது நான் ரசித்துக்கேட்ட ஒன்றிரண்டு திரைப்பாடல்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன. "வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா ?", "காதல் என்பதா காமம் என்பதா ?", "உயிரின் உயிரே" முதலிய பாடல்களின் வரிகளை படியில் நின்றுகொண்டே முனுமுனுத்தது பசுமரத்தாணி. RKMன் நடத்துனர்கள் கூட மிகவும் இயல்பாகவே பழகியதாக நினைவு ... பெரும்பாலும் எங்கள் வயதையொத்த இளைஞர்கள் தாம் .. பேருந்து முழுக்க பள்ளிப்பாவையர் - பேருவகையுடனே பயணச்சீட்டைக் கிழித்தனர்.

சங்ககிரி போன்ற சிறுநகரத்தில் அமையப்பெற்ற பள்ளிகளில் சமுதாய ஆண்-பெண் ஒழுக்கக்கூறுகள் எவ்வாறெல்லாம் நிறுவப்பெற்றிருக்கும் என்பதற்கு பெரிய அளவில் விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன். (இன்றைய தேதியிலும், சென்னை மற்றும் தமிழகமெங்கும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிகளைக் கவனித்தாலே புரியும், நமது ஒழுக்கக் கோட்பாடுகள்). கலாசார காவலர்கலாகவே வலம் வருவார்கள் ஆசிரியர்கள். பள்ளியின் பெயர் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பது அவர்களது குறியாக இருந்தது. இயல்பாக அமையப்பெற வேண்டிய ஆண்-பெண் நட்புச்சூழல் சமூகம், பள்ளி, கல்லூரி எங்குமே கிடைப்பதில்லை என்பது தனிப்புலம்பல் ... அதை விடுவோம்.

கட்டுப்பெட்டித்தனமே நிறைந்து வழிந்தோடும் சமூகத்திடமிருந்தும், பள்ளியிடமிருந்தும் ஒரு தற்காலிக விடுதலையாகவே அந்த RKM பயணம் எனக்குத்தென்படுகிறது. அந்த வயதினில் இவற்றை நான் உணர்ந்ததில்லை ... ஆனால், இன்று அப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது. உண்மையாகவே, RKM பயணங்கள் பதின்பருவத்தினரான எங்களின் உற்சாகம், வேகம், உணர்வுகள் முழுவதையும் பிரதிபலிக்கக்கிடைத்த ஊற்றுக்கன்னாகவே கருதுகிறேன். அன்றைய எண்ணங்களும், சிந்தனை ஓட்டமும் வித்தியாசமானவை ... என்றாலும், இன்றளவில் எண்ணிப்பார்த்தால் பதின்பருவத்து உணர்வுகளான Peer pressure, Infatuation, shyness, coyish glances முதலிய அனைத்தையும் சிக்கலின்றி நாங்கள் வெளியிட்ட இடம் RKM பேருந்து தானோ என்றெண்ணுகிறேன். மொத்தத்தில் நாங்கள் நாங்களாக இருக்கும் வெகு சில இடங்களில் அந்த RKM பயணத்திற்கு மிக முக்கியப்பங்கு இருந்ததென்னவோ உண்மை.

வாழ்த்து அட்டைகளோ, காதல் மடல்களோ பரிமாறிக்கொள்ளும் அளவுக்கெல்லாம் எவனுக்கும் தைரியம் இருந்ததாக நினைவில்லை ... எல்லாம் பார்வைகளின் ஊடாகவே நடந்தேறின. எனக்கு நினைவு தெரிந்து நான்கைந்து காதல் ஜோடிகளுடன் நான் பிரயாணம் செய்திருப்பேன். ஒன்றிரண்டு சீனியர்-ஜூனியர் ஜோடிகள் கூட உண்டு. உணர்வுகளை வெளிப்படுத்த பார்வைகள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், அந்த தவிப்பு மிகுந்த சிருங்காரப்பார்வைகள் ...கண்கூடாய்ப்பார்த்தது நினைவிருக்கிறது எனக்கு. பலசமயங்களில், பேருந்தின் முன்பகுதிகளில் அமர்ந்திருக்கும் பெண் இவனை கவனிக்கக்கூடமாட்டாள் ... அவள் நோக்கும் ஒரு நொடிக்காக காத்துக்கிடப்பான் இவன். இதில் சமவயதுக்காரர்களின் கிண்டல், கேலிகளையும் சமாளித்தாக வேண்டும். இப்படியாக எங்களோடு எங்களின் எத்தனையோ தவிப்புகளையும், உணர்வுகளையும் சுமந்து தாம் RKM பயணம் செய்திருக்கும்.

அவசரம் அவசரமாக அசைன்மென்ட் காப்பி அடிப்பது, தேர்வு சமயங்களில் வினாக்களை விவாதிப்பது, புத்தகத்தை வைத்து படிப்பது, படியில் நின்று சீன் போடுவது என அனைத்தும் RKMஇல் ஐக்கியம். சினிமா, கிரிக்கெட் முதலிய பொதுப்படையான விமர்சனக்கருத்தாக்கங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும். சில சமயம், முந்தைய நாள் கிரிக்கெட் ஆட்டம் அக்குவேராய் பிரித்து மேயப்பட்டுக்கொண்டிருக்கும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்குக்கூட RKM இல் தான் நான் பயணம் செய்தேன். RKM எனது பள்ளி வாழ்கையின் ஒரு முக்கியமான பாத்திரம் என்றே கருதுகிறேன்.

கல்லூரிப்படிப்பு - விடுதி வாழ்க்கை ... பேருந்துக்கும் எனக்குமான தொடர்பு அறுந்தே போனது. பின்னர், பெங்களூர் வாசம் ... இங்கு தங்குதடையின்றி வாகனங்கள் செல்ல வழியே இல்லை. பேருந்து பயணங்கள் களிப்பும், சுவாரசியமும் தருவதற்க்கான மிக முக்கியமான காரணம் - காட்சி இன்பம் தான் ... சாலையில் வேகமாய்ப் பயணிக்கும் போது தான் அது காணக்கிடைக்கும். பேருந்து சிக்னலில் நின்றே கிடக்கும் காலம் தனில் அது வெறுப்புக்குரிய அனுபவமாக ஆகிறது. நம்ம ஊர் அரசுபேருந்தில் கிடைக்கின்ற இன்பம், இங்கே எனக்கு வோல்வோ பேருந்தில் கிட்டியதில்லை என்பேன்.

8 comments:

 1. நல்ல ரசனையுள்ள ஒரு பதிவு.
  இப்பதிவைப் படிக்கும் பொழுது எனது பேரூந்து பயணங்கள் ஞாபகம் வருகின்றன.
  என் பள்ளிப் பேரூந்தில் 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கே அனுமதி (மாணவிகளுக்கு இவ்விதிமுறை இல்லை). அப்பொழுது கையெழுத்து ஏட்டில்(இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எழுத வேண்டும்)பேரூந்தின் குலுங்கல்களோடு கிறுக்குவோம். சில முறை ஆசிரியைகள் வந்து அதைக் கண்டிப்பார்கள் (கையில் கோலோடு). மேலும் கணக்கு வீட்டுப்பாடங்களை பேரூந்தில் தான் எழுதவேண்டும் என்ற ஒரு நடைமுறை கூட இருக்கும்.
  அதிலும் பேரூந்தில் நமக்கென்று ஒரு இருக்கை இருக்கும். வேறு யாரும் ஆக்கிரமித்தால் சண்டை தான்.
  இது தவிர பொதுப் பேரூந்துகளில் செல்லும் பொது நீ எழுதிய அனைத்தையுமே அனைவருமே செய்திருப்பார்கள். குறிப்பாக ஜன்னலோர இருக்கை, கடைகளின் பெயர்ப்பலகைகள் வாசிப்பது. விடுபட்டவை- மழை மற்றும் கொளுத்தும் வெயில் நேரத்தில் மட்டும் பெருமிதமாக ஜன்னலோர இடத்தை விட்டுக்கொடுப்பது.
  சின்னஞ்சிறு விஷயங்களைக் கூட ரசிக்கும் உனக்கு என் வாழ்த்துக்கள்.
  "பேரூந்து"-எழுத்துப் பிழையோ?

  ReplyDelete
 2. "பேரூந்து"-எழுத்துப் பிழை தான்

  Thanks Peru for the comment ..

  Glad that you revived and relived back your experiences ... That was precisely the purpose ...

  :)

  ReplyDelete
 3. Sangagiri lirundhu ippadi oru puratchipuyalaa nu nenachu paakropodhu pul arikkudhu da lullu

  Thayavu senju inimel idhu maathiri mokka poduratha niruthu :)

  Ivan busla ulla figuregala sight adipaanaam , sevathula ulla attu padam postera jollu vittu paappanaam..adha vilamabara padutha vendiyathu !!Periya pudungi paaru..RAAASCALAA :)

  Udanae,Rajan ku rasanai illa nu solla vendiyathu...Idhellam kaala koduma da..Unna solli kuthamillaaa...Idha padikkum podhu ennakku indha samudhayathin meeethu aathangam varudhu (Nalla payala ippadi kirikkanaaa aakki vachirukkaaae !!!! ) :)

  ReplyDelete
 4. great gokul!! took me to 1999 days... i cherish those days a lot than my college days.. even i have few songs as u have.. like "pallanguliyin vattam paarthen", minnale songs and lot more illayaraja songs.... :) weekdays rkm maari weekend la kms :) enjoyed ur blog.. keep going!

  ReplyDelete
 5. Kannu ... Glad that you liked it ...

  ReplyDelete
 6. அழகான பதிவு கோகுல்.

  அப்படியே கொஞ்சம் வேர்ட் வெரிபிகிஷேனை தூக்குங்களேன்.

  ReplyDelete
 7. Hi Vidhya,

  Thanks for the comment.
  I am not moderating the comments I receive. With word verification, I am just making sure that the comments are not from a random bot but from a human ...

  :)

  ReplyDelete
 8. mika arumai...

  athu oru alagiya nila kalam....


  i want to grow up once again...

  -Raja

  ReplyDelete